Sunday, February 7, 2010

எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவார்...!

ரொம்ப நாளா பார்க்க வேண்டும் என்றிருந்த ராமசாமியை இன்று பார்த்து எப்படியும் மார்கட் பிளஸ் பாலிஸி ஒன்று வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவருக்கு சுமார் 50வயது இருக்கும். சென்ற முறை பார்த்த போதே ‘ ஏதாவது பென்ஷன் பிளான் இருந்தா சொல்லுஎன்றது நினைவுக்கு வந்ததால் மார்கட் ப்ளஸ் காப்பீடு இல்லாத திட்டத்தில் எல்.ஐ.சி வழங்கியுள்ள 6% மற்றும் 10% ரிடர்ன் வரும் எடுத்துக்காட்டையும் படித்து, புரிந்து கொண்டு பையில் வைத்துக் கொண்டேன்.

ராமசாமி தனியார் கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என்று கொஞ்சம் பெரிய குடும்பம். ஆனால் ஆறு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராமசாமியும் அவர் மனைவியும் திருச்சியில் இருக்க அவருடைய மகன்கள் கரூர், காரைக்கால் மற்றும் துறையூரில் வசிக்கின்றனர். மருமகன்கள் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சீர்காழியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இப்போது ராமசாமி தன்னுடைய கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம்- 30 ஆண்டுகளுக்குப் பிறகு. மூதாதையர் சொத்து விற்றதில் ஓரளவு வங்கியில் பணம் வைத்திருக்கிறார்.

காலை ஏழு மணிக்கெல்லாம் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். மனிதர் சுவாரசியமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

“ஐயா வணக்கம். நல்லாயிருக்கீங்களா?

“வாங்க தம்பி! நல்லாயிருக்கேன். எங்கே ரொம்ப நாளா காணல?

“இல்லிங்க ஐயா... நான் ஒரு மாசமாவே வரணும்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா ஏதாவது ஒரு வேலை வந்துடறது. இன்னிக்கு பார்த்தே ஆகணும்னு முடிவு பண்ணியிருந்தேன்.

“என்ன சமாச்சாரம் தம்பி?

“அதாங்கய்யா, போன வருஷம் உங்க கிட்ட ஒரு பாலிசி கேட்டிருந்தேன். நீங்க அடுத்த வருஷம் பாத்துக்கலாம், கடைசி பொண்ணுக்கு கல்யாணம் முடிச்ச உடனே செஞ்சுக்கலாம்னு சொல்லியிருந்தீங்க. அதான்.... பாத்துட்டு போவலாம்னு வந்தேன்.

“பரவாயில்லையே. நல்லா ஞாபகம் இருக்கே. எம் பொண்ணு கூட சொன்னா, நீ கல்யாணத்துக்கு 15 லிட்டர் பிரஷர் குக்கர் கிஃப்ட் பண்ணியிருந்தேனு. அதுல தான் சமையலேவாம். அரிசி பொங்கும் போதெல்லாம் உன் நினப்பு வருமாம்

பெருசு, குக்கர் எங்க பொங்கும் என்று நினத்துக் கொண்டு

“லதா நல்லாயிருக்கா. அவங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்?என்று கேட்டு வைத்தேன்.

“மாப்ள தனியார் ஸ்கூல்ல வேலை பாக்குறார். அதைத் தவிர அவங்க பெரிய அண்ணன் ஒருத்தரு ஏஜெண்டா இருக்கார். அவருக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி புரமோஷன் கிடச்சிதாம். அதுக்கு ஏதோ பாலிசி புடிக்கிறதோட சேத்து ஏஜண்டும் புடிக்கணுமாம். நம்ம மாப்ள பேர்லயே ஒரு லைசென்சு வாங்கிட்டு அவரே பிசினஸ் பண்ணி, இப்ப நம்ம மாப்ளைக்கும் புரமோஷன் கிடைச்சிடுச்சாம். ஏதோ பேர் சொன்னாரு..மறந்துட்டேன்.

“நல்ல விஷயம் தான். நல்ல காண்டாக்ட்ஸ் கிடைக்கும்; வருமானமும் வரும்.

“என்ன காண்டக்டோ போ. ஒண்ணும் புரியல. போன மாசம் எம் பொண்ணு வந்து ‘அப்பா, ஒன்னோட எஸ்.எஸ்.எல்.சி சர்டிஃபிகேட் தான்னுவாங்கிட்டு போனா. முந்தா நாள் தான் நானும் ஏஜண்ட்னு ஒரு லைசென்ஸ் வந்தது.

“நீங்க ஏஜண்ட் ஆயிட்டீங்களா? உங்களால அதுக்கெல்லாம் அலைய முடியாதே.

“நா மட்டுமில்ல. என் 3 பொண்ணு, 3 பையன் எல்லாரும் ஏஜண்ட் ஆயிட்டோம். ‘பிஸினஸ் பத்தி நீங்க கவல படாதீங்க, மாமானு மாப்ள சொல்லிட்டாரு

“அப்ப, குடும்பத்துல உங்க வீட்டுக்காரம்மா தவிர மீதி எல்லாரும் ஏஜெண்டா?

“ஆமாம்பா, அவ அந்த காலத்துல மூணாவது வரைக்கும் படிச்சிருக்கா. இப்ப டைரெக்டா எஸ்.எஸ்.எல்.சி க்கு ட்யூஷன் போயிக்கிட்டு இருக்கா. அத தவிர, இவளுக்கு ஏதாவது சந்தேகம்னா என் பெரிய மகள் வயித்து பேரன் ப்ளஸ் டூ எழுதப் போறான். பாட்டிக்கு ஏதாவது சந்தேகம்னா ஃபோன்லயே சொல்லிக் குடுத்துடுவான். இந்த மே மாசத்துக்குள்ள இவங்க ரெண்டு பேர் பேர்லயும் லைசென்ஸ் எடுத்துடலாம்னு மாப்ள சொல்லிட்டிருக்கார்.

எனக்கு வயித்தெரிச்சல் தாங்கல. திட்டவும் முடியல. கிளம்பவும் முடியல.

“ஏன்யா இது என்ன டிரைவிங் லைசென்ஸானு கேக்கணும்னு எரிச்சல். அடக்கிக் கொண்டு,

“பலே! பலே! அப்புறம்? என்று கேட்டு வைத்தேன்.

“அடுத்த மாசம் பொண்ணுக்கு வளகாப்பு. மாப்ள தஞ்சாவூர்லயே வச்சிக்கலாம்னு சொன்னார்.

“நாள் பாத்தாச்சுங்களா? தேவையே இல்லாமல் கேள்வியைக் கேட்டேன்.

“அது வந்து, மாசாமாசம் எல்.ஐ.சில ஏஜண்ட்ஸ் மீட்டிங் போடுவாங்க இல்ல. அதுக்கு எப்படியும் என் 3 பசங்களும் மத்த 2 பொண்ணும் வரும். நாங்களும் போவோம். இந்த மாசம் மேனெஜரைப் பாத்து வளைகாப்புக்கு பொறுந்தர மாதிரி ஒரு நாள்ல மீட்டிங் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கு.

‘இப்படி எல்லார் பேர்லயும் லைசென்ஸ் வச்சுக்கிட்டு என்னய்யா லாபம்னு கேக்கத் தோணிச்சு;ஆனா கேக்கல.

அவரே தொடர்ந்தார்.

“மாப்ள, ஏதாவது ஒண்ணு, ரெண்டு முடிஞ்சா பாத்துக் கொடுக்கச் சொன்னார். எனக்கு உன் நினப்பு தான் வந்தது. அவர் கிட்ட உன்ன பத்திச் சொன்னேன். உனக்கு வரதவிட 10% கூட வருமாம். அதனால நீ பாத்த பிசினஸ் ஏதாவது இருந்தா சொல்லு. 35க்கு பதில 40 வாங்கிக்கலாம். ஒண்ணும் பிரச்ன இல்ல.

கிழவன் அடிமடியில கையை வக்கிறான். இனிமே இங்க இருக்கறது நமக்கு அசிங்கம் என்று உடனே கிளம்பிட்டேன்.

கடந்து வந்த டீகடையில் கோடை எஃப்.எம். “எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவார்.....

1 comment:

  1. Simply super ! sirippu thaan adakka mudiyala . aanaa vayitherichalavum irukku. ennna pozhappu idhunnu.

    ReplyDelete