
முகவர்களுக்கான குறைந்தபட்ச வணிக அளவை உயர்த்தியது
கடந்த 24.07.2009 அன்று “Amendment in Minimum Amount of Business to be secured by the agents (Rule 9 of Agents Rules, 1972)” என்ற சுற்றறிக்கையின் வாயிலாக 09.07.2009 முதல் முகவர்கள் முகவாண்மையை எல்.ஐ.சி.யில் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய வணிக அளவை பிரிமியம் அடிப்படையில் ஒரு லட்சம் என்ற புதிய அளவுகோளை நுழைத்தது. இந்த மாற்றத்தை நியாயப்படுத்தி கிளைதோறும் விசேஷ விளக்கவிழா நடைபெற்றது. நிர்வாகம் கூறும்(அ) நியாயங்கள்:
1) வணிக உற்பத்தியைப் பெருக்குவது:
2) முகவரின் வருமானத்தைக் கூட்டுவது;
3)முகவாண்மை ரத்தாவதைக் குறைப்பது.
இதைவிட இந்த ஆண்டின் நிர்வாகச் சீர்த்திருத்த நகைச்சுவை வேறெதுவும் இருக்கமுடியாது.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவனை வானம் ஏறி வைகுண்டம் போகச்சொன்ன கதை தான் நினைவுக்கு வருகிறது. மூன்றடி உயரம் தாண்ட முடியாதவனை முப்பதடி உயரம் தாண்டச் சொல்லும் மேதைகளை எங்கே காணமுடியும்? 35 மதிப்பெண் பெறுபவனை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டுமென்றால் அதற்குண்டான விசேஷ பயிற்சி வைத்து தான் பார்த்திருக்கிறோம். இப்படியா.. தேர்ச்சிக்கான அளவையே கூட்டிவிட்டால்.
இதன் விளைவாக என்ன நடக்கப் போகிறது என்பதை நிர்வாகம் அறியாமலா இருக்கும். அவர்கள் சுயவிளக்கத்தில் சொன்ன அந்த மூன்று காரணங்களுக்கும் நேர் எதிர்மறையான் விளைவுகள் தான் விளையப் போகிறது.
உரிமம் பெற்ற முகவருக்கான குறைந்தபட்ச வணிக அளவுகள் அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தனியார் நிறுவனமும் இதில் வித்தியாசமான அளவுகளை வைத்துள்ளன. அவையனைத்தும் நம்மைவிட குறைவாகத்தான் உள்ளன.
ஆக, இந்த மாற்றத்திற்குப் பின் ஒரு முகவர் இங்கு செய்யமுடியாவிட்டால் உரிமத்தை வைத்துக்கொண்டு மாற்றம் பெற்று விரும்பும் நிறுவனத்திற்குச் செல்ல வழி வகுக்கும் ஒரு அபாயகரமான திட்டத்தின் பின்னணி என்னவாக இருக்கமுடியும்?
இது ஏதோ அவசர பிரசவத்தில் வெளியே வந்துவிட்டதோ என்றும் எண்ணும் வகையில் முகவர்கள் reinstatement குறித்த தளர்த்தப்பட்ட ஒரு சுற்றறிக்கை. ஏதோ காத்திருப்போர் பட்டியல் வெளியிடுவது போல... தாமும் குழம்பி மற்றவரையும் குழப்பி...
ஆனால் இதன் விளைவு, முன்பெல்லாம் trial & error முறையில் 12 பாலிசிகள் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நியமனம் செய்த முறையை சற்று மறுபரிசீலனை செய்யும் நிலையை அடைந்துவிட்டோம்.
இதன் விளைவாக இதுகாறும் நம்முடன் விசுவாசமாக பணியாற்றிய ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் – சமூகத்தில் பொருளாதாரத்தில் நடுத்தரத்திற்கு கீழேயிருக்கும் இளைஞர்கள், டீ கடைக்காரர், சைக்கிள் கடைக்காரர், பெட்டிக்கடைக்காரர், தையல்காரர், கணவனை இழந்த கைம்பெண்கள், விவசாயக் கூலிகள் இவர்களைப் போல் இன்னும் பலர் – வேலையிழந்து வருமானத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ள இந்த நிர்வாகம் தயாராகிவிட்ட்து.
இது இந்த தேசத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயல். இதற்காகவா இத்தனை ஆண்டுகளும் இவர்கள் நம்மோடு இருந்தார்கள்? நெஞ்சு பொறுக்குதில்லையே.. நிர்வாகத்தின் இந்த நிலைமாறும் போக்கை நினைக்குங்கால்...
No comments:
Post a Comment