Monday, February 1, 2010

ஒரு ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான். அவன் ஒரு கழுதையையும் ஒரு நாயையும் தன் வீட்டில் வளர்த்து வந்தான்.

தன் அன்றாட சலவை வேலைகளை முடித்துக் கொண்டு மிகவும் களைப்போடு வீடு வந்து சேர்ந்தான். நள்ளிரவு..ஊரே உறங்கிக் கொண்டிருந்த சமயம்.

திருடன் ஒருவன் கொள்ளையடிக்கும் பொருட்டு வீடு புகுந்தான். வண்ணான் அசதியாய் தூங்கிக்கொண்டிருந்த சமயம்.

காவலுக்காக வெளியே கட்டப்பட்டிருந்த நாய், தன்னை தன் எஜமானர் சரியாக கவனிக்காத வெறுப்பில்,அவருக்கு பாடம் கற்பிக்கும் பொருட்டு, தன் கடமையான குரைத்து விரட்டுவதை அன்று செய்வதில்லை என்று முடிவு செய்து அமைதியாக இருந்தது.

இதைக் கவனித்து புரிந்துகொண்ட கழுதை கவலையடைந்து தன் எஜமான விசுவாசத்தைக் காட்ட நினைத்தது.

கழுதை நாயைப் பார்த்து ‘ நீ குரைக்கவில்லை என்றால் நான் கத்த வேண்டிவரும்.ஆனால் நாய் கண்டுகொள்வதாக இல்லை.

பொறுமையிழந்த கழுதை தன் அகோரமான குரலில் கத்த ஆரம்பித்தது.

திருடன் தப்பி ஓடிவிட்டான். விழித்துக்கொண்ட வண்ணான்,வெளியில் வந்து பார்த்தான். தேவையில்லாமல் கத்தி தன் தூக்கத்தைக் கலைத்ததாக நினைத்து கழுதையை நையப் புடைத்தான்.

நீதி: அடுத்தவன் வேலையில் மூக்கை நுழைக்காதே !

.

.

.

.

சரி...இப்போது இக்கதையின் புதிய வடிவைப் பார்ப்போம்.

இவன் ஒரு நவீன யுகத்து ஹைடெக் சலவைத் தொழிலாளன். எந்த ஒரு யலையும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று நினைப்பவன்.

வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தவுடன் கழுதை எந்த திசையை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறது என்று கவனித்தான். யாரோ ஓடிச்சென்றிருக்கும் தடம் தெரிகிறது. திருடன் வந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறான்.

தன் கழுதையின் அக்கறையையும் ஆர்வத்தையும் அறிந்து அதை முன்பைவிட அதிகமாய் கவனிக்கிறான். முன்பைவிட சுவையான தீனி, கொட்டகை, உபசரிப்பு எல்லாமே மாறிவிட்டது. கழுதைக்கு நிலைகொள்ளவில்லை.

நாயின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. தன்னுடைய வேலையை கழுதையிடம் திணித்த சம்பவத்தை நினைத்து ‘இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா...இன்னும் எத்தனை நாளம்மாஎன்று காத்திருந்தது.

வருடம் முடிந்து, பணித்திறன் குறித்த ‘அப்ரைஸல்முடிந்தது. நாய் ‘சுமார்என்றும் கழுதை ‘சூப்பர்என்றும் மதிப்பீடு பெற்றது.

நாளடைவில் கழுதையார் தன்னுடைய வேலைகளையும் சேர்த்து பார்த்துப் பழகியதால் நாய் இது வரை தான் ரசிக்கத் தவறிய உலக விஷயங்களில், தன் சொந்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அடிப்படைக் கடமைகள், அதற்குண்டான ஊதியத்துடன் சிரமப்படாமல் காலம் தள்ள பழகிவிட்டது.

இன்னொரு புறம்.. ஆரம்பத்தில் கூடுதல் உபசரிப்பில் கூடுதலாக அடுத்தவனின் வேலையை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற கழுதை, வேலைப்பளு தாங்கமுடியாமல் பணிமாற்றம் கிடைக்குமா என்று ஏங்கத் தொடங்கியது.

என்ன....புரிந்திருக்குமே கதை...வெறும் கதையல்ல.. நம்மைச் சுற்றி நடப்பதின் பிரதிபலிப்புதான் என்று.

இதைத் தான், திருவள்ளுவர்,அன்றே

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்றாரோ ? புரிந்தால் சரி...

2 comments:

  1. Enge piditheer ippadi oru unmai kathayai? Padaithatho ? pidithatho? enakku migavum pidithathu.

    SBA and developmemnt officers kathai alla alla,

    Kazhuthaiyum nayum kathai vegu jore.
    Moorthy.R

    ReplyDelete
  2. நன்றி ! தங்கள் வருகைக்கு நன்றி ! இந்த கதை SBA மட்டும் அல்ல,CLIA க்கும் பொறுந்தும். ஆனால் இரண்டு நிலைகளிலும் சலவைத்தொழிலாளி பாத்திரம் ஏற்றிருப்பவர் ஒருவரே தான்.

    ReplyDelete