Thursday, February 4, 2010

Aspiring SBA Scheme & Agents Unit Meeting


ASBA மற்றும் முகவர் கூட்டம் குறித்த அறிவுப்புகள் பற்றி

சமீபத்தில் மைய நிர்வாகக் கமிட்டி கூடி ஜனவரி/பிப்ரவரி மாதத்தை வளர்ச்சி அலுவலர் மாதமாககொண்டாட முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். வளர்ச்சி அலுவலர்கள் மனதில் நம்பிக்கையூட்டும் முயற்சிகளில் (Confidence Building Measures) அதிகாரிகள் ஈடுபடவேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். (இதுவரை இது நிகழவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் என்று அர்த்தம் கொள்க) ஆக இவை வரவேற்க வேண்டிய மாற்றங்களே !

இப்போது இதன் தொடர்ச்சியாக இரண்டு சுற்றறிக்கைகளைப் பார்ப்போம்.

1) முகவர் கூட்டத்திற்கான (பிப்ரவரிக்கு மட்டும்) செலவுகளை நிர்வாகமே ஏற்றல்.

2) விருப்பப்படும் வளர்ச்சி அலுவலர்களை ( விதிகளுக்கு உட்பட்டு) Aspiring Senior Business Associate’ ஆக தேர்வு செய்தல்.

இவையிரண்டுமே நம்பிக்கையை வளர்க்கும் நல்ல எண்ணத்தோடு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதா என்பதை சுற்றறிக்கைகளில் உள்ள விதிமுறைகளே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

கூட்டச்செலவுகள் பொறுத்தவரை அது ஒரு Reimbursement திட்டமும் கிடையாது. சுதந்திரமாக நாம் நினைத்தவாறு நடத்தவும் முடியாது. (கூட்டத்தில் நடப்பு கால போட்டிகளைப் பற்றி விளங்க வைக்க சிறப்புரை ஆற்ற கிளை அதிகாரி இருப்பார். அவர் வேறெதுவும் பேசப்போவதில்லை). ஆக இதுவரை கிளைகளில் இவர்கள் முகவர் கூட்டம் நட்த்திய அதே வகையில் கூட்டம் நடத்துவர். அது வளர்ச்சி அலுவலரின் அணி வாரியாக இருக்கும். அதில் நீங்களும் பங்கேற்கலாம். அவ்வளவு தான் செய்தி.

சில அடிப்படை செலவுகள் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கமுடியும். உதாரணத்திற்கு கூட்ட அரங்கிற்கான வாடகை, மின் நுகர்விற்கான கட்டணம்.

மாற்றத்திற்குரிய செலவுகள் முகவர்களுக்கான செலவுகள். குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட கூட்டங்களுக்கு இந்த அடிப்படைச் செலவுகள் எல்லைமீறிப் போகும்.

ஆக, இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச செலவுகள் நிர்ணயம் செய்து அது முகவர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும், இதைப் போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு மாதமும் இருக்க வேண்டும். அதில் கூட்ட்த்தின் மையக் கருத்து பங்கு பெறும் அனைவரின் தனி வணிக பங்களிப்பைக் கூட்டும் குறிக்கோளாக இருக்கவேண்டுமே ஒழிய வளர்ச்சி அலுவர்களுக்கு ரூபாய்க்கு ஐந்து பைசா CREDIT தரும் திட்டங்களை (யூலிப், ஜீவன் நிஸ்சய்) முன்னிறுத்துவதற்காக மட்டுமே இருக்கக் கூடாது.

கூட்டத்திற்காகும் செலவுகளை கிளை நிர்வாகமே நேரிடையாகச் செய்வதில் மகிழ்ச்சியே, செலவுகள் எம் கையை கடிக்காமல் இருந்தால் போதும் !

அடுத்து,

Aspiring Senior Business Associate’ திட்டம். SBA 5000 பேர் விருப்பப்பட்டு இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 511 பேர் மட்டுமே சேர்ந்ததிலிருந்து இந்தத் திட்டத்தின் வெற்றியைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்டியாக வேண்டும்; மீசையிலும் மண் ஒட்டக் கூடாது என்று ரூம் போட்டு சிந்தித்ததன் விளைவு ASBA திட்டம்.

இந்த SBA திட்டத்தின் மீதே இன்னும் நம்பிக்கை வரவில்லை. அப்படியிருக்க அடுத்த வருடம் ஆக விருப்பப் படுகிறவர்களுக்குஎன்ற ஒரு திட்டம் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்.

NEC கூட்டத்தில் நாம் SBA திட்டத்தில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி இதே வடிவத்தில் இதை ஏற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். இதையே மறைமுகமாக நம் மீது திணிக்க இந்த நிர்வாகம் முயற்சிக்கிறது.

நம்மைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை (IB) போன்ற பயன்கள் (Benefits) வேண்டுமானால் cost ratio அடிப்படையில் இருக்கலாம்.

ஆனால் சலுகைகள் (facility or privilege) அனைத்தும் வெறும் cost ratio மட்டுமின்றி வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மற்ற பல குறியீடுகளின் (வயது, அனுபவம், முந்தைய சாதனைகள், பணியிடம், வணிகத்தின் மற்ற குறியீடுகள் போன்றவை) அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

மேலும் இத்தகைய சலுகைகள் வெறும் சலுகைகளே அன்றி வேறு பதவி அல்ல என்ற வகையில் தகுதி பெறுபவர்களும் வளர்ச்சி அலுவலர் என்று தான் அழைக்கப்பட வேண்டும். புதியதாக ஒரு பெயர் சூட்டக் கூடாது.

அவர்களின் அலுவலகம் “ எல்.ஐ.சி. வளர்ச்சி அலுவலர் அலுவலகம் “ என்று தான் இருக்க வேண்டும்.

நண்பர்களே!10 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதத்திற்கு வர என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது செய்வதைப் போன்று மூன்று மடங்கிற்கு மேலாக பிரிமியம் கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, மாதம் இருமுறை இது தொடர்பான REVIEW நடத்தப்படுமாம்.

வெறும் 500 ரூபாய் இண்டெர்னெட் இணைப்பின் வாடகையைப் பெற இந்தப் புதிய திட்டம் தேவை தானா? தேவையில்லை என்பது நமது திட்டவட்டமான கருத்து.

விட்டில் பூச்சிகள் வேண்டுமானால் விளக்கில் விழுந்து மடியலாம்.

நாம் அதற்குத் தயாரில்லை.

நமக்கிருக்கும் அடிப்படை கேள்விகள் இவை தான்.

  1. இது என்ன பதவி உயர்வா ?
  2. இது நிரந்தரமானதா ?
  3. இந்தப் பணியின் பரிமாணங்கள் அனைத்தும் என் கட்டுப்பாட்டுக்குள் உரியதா?
  4. நான் ஏற்கனவே செய்து வரும் பணிக்குப் பலமா ?
  5. இது என் மொத்த வருமானத்தையும் அந்தஸ்தையும் வளர்க்கக் கூடியதா ?
  6. மற்ற பணியாளர்களோடு என் நெருக்கத்தை வளர்க்கக் கூடியதா ?

இவையனைத்திற்கும் ஆம்என்ற உத்தரவாதத்தைத் தரமுடியுமா ? முடியாது, ஏன் என்றால் இவை இல்லாமல் போகச்செய்ய வேண்டும் என்பது தானே நிர்வாகத்தின் கணக்காகத் தெரிகிறது.

நாம் என்ன பெரிதாகக் கேட்டுவிட்டோம் ?

இப்போது நிர்வாகம் நம் மேல் அக்கறை கொண்டிருப்பது போன்ற தோற்றம் உண்மையானால், கீழே உள்ள எங்களின் நியாயமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

1. நான் உழைத்துப் பெற்ற சம்பள உயர்வை பறிக்கக் கூடிய விதிமுறைகளை வாபஸ் பெறு.

2. என்னோடு பணியாற்றும் அனைத்து முகவர்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை நான் கொடுப்பது போல அனைவர்க்கும் 100% கிரெடிட் கொடு. (உண்மையில், 10 வருடம் ஆன முகவர்களைத் தக்கவைத்துக் கொள்வது சுலபமான காரியமல்ல)

3. விற்பனையாகும் அனைத்து திட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக 100% கிரெடிட் கொடு. (உண்மையில், இந்த 20% ற்கும் 5% ற்கும் தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது)

இவை அடிப்படையான தேவைகள்.

நிர்வாகம் உண்மையில் நல்லெண்ணத்தை வளர்க்கும் முகத்தால் இம்மாதத்தை ‘வளர்ச்சி அலுவலர் மாதமாகஅறிவித்திருந்தால் எம் எண்ணத்தை நம் கூட்டமைப்பின் தலைவர்கள் இதுகாறும் தொடர்ந்து வலியுறித்தி வரும் நியாயமான கோரிக்கைகளை சீர்தூக்கி ஏற்றுக் கொண்டாலே போதுமானது. புதிய புதிய கவர்ச்சி அறிவிப்புகள் எவையும் எம்மைக் கவரப் போவதில்லை. வீணே காசைச் செலவு செய்து வெட்டி வியாக்கியானங்கள் பேசுவது நம்மை முன்னேற்றிச் செல்லப் போவதில்லை.

“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.“

நன்மை, தீமையறிந்து செயல்படக் கூடியவரை தெரிந்தறிந்து, அவர்களுடன் கலந்து உரையாடி, தெளிவுடன் ஒரு செயலைச் செய்வார்க்கு, செய்ய முடியாத செயலொன்றும் இல்லை.

இதை விடுத்து தனக்குத் தானாகவே முடிவுகளை எடுத்து நியாயப்படுத்த எண்ணும் போக்கு எதிர்பார்த்த விளைச்சலைத் தரப்போவதில்லை.

நிறுவன வளர்ச்சியில் அக்கறையுடன்....

சுற்றறிக்கையைக் காண இங்கே செல்லவும்.

http://nfifwitnj.blogspot.com/2010/02/conduct-of-unit-meetings-in-feb-2010

http://nfifwitnj.blogspot.com/2010/02/aspiring-sba-scheme

பார்த்துவிட்டு கீழேயுள்ள பெட்டிச் செய்தியையும் பார்க்கவும்.

ASBA திட்டத்தின் மூலம் நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது?

உதாரணம்:

மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட தோழர்

தற்சமயம் மாதம் சம்பளம் 15000

வருட வருமானம் 180000

தற்சமயம் cost 15%

அதாவது மொத்த பிரிமியம் 12,00,000

SBA தகுதி பெற cost 3%

அதற்குத் தேவையான பிரிமியம் 60,00,000

அதாவது 5 மடங்கு.

வளர்ச்சி விகிதம் 400%

புரிந்திருக்குமே !

உங்கள் களம் இது. கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

2 comments:

  1. "கூட்டச்செலவுகள் பொறுத்தவரை அது ஒரு Reimbursement திட்டமும் கிடையாது. சுதந்திரமாக நாம் நினைத்தவாறு நடத்தவும் முடியாது. (கூட்டத்தில் நடப்பு கால போட்டிகளைப் பற்றி விளங்க வைக்க சிறப்புரை ஆற்ற கிளை அதிகாரி இருப்பார். அவர் வேறெதுவும் பேசப்போவதில்லை). ஆக இதுவரை கிளைகளில் இவர்கள் முகவர் கூட்டம் நட்த்திய அதே வகையில் கூட்டம் நடத்துவர். அது வளர்ச்சி அலுவலரின் அணி வாரியாக இருக்கும். அதில் நீங்களும் பங்கேற்கலாம். அவ்வளவு தான் செய்தி"
    சரியாகச் சொன்னீர்கள் !
    நேற்று கிளைமேலாளர் அலைபேசியில் டொடர்பு கொண்டு ‘புதுசா ஒரு scheme வந்திருக்கு. யூனிட் மீட்டிங் நீங்க போடணும். முகவருக்கு 150 ரூவா. நீங்க நம்ம ஆஃபீஸ் ஏ.டி.சி க்கு வரச் சொல்லிடுங்க. டீ, ஸ்னேக்ஸ் நானே ஏற்பாடு பண்ணிடறேன்.மீட்டிங் அஜெண்டா மார்கெட் பிளஸ், ஜீ.நிஸ்சய் அப்புறம் பிப்ரவரி-மார்ச் பிசினஸ் டார்கெட்.’
    இப்ப என் சந்தேகம் என்னன்னா, இது நமக்கான திட்டமா அல்லது மேனேஜர் செலவுக்கான திட்டமா ?

    ReplyDelete
  2. The blog of kalamurasu is excellent.KEEP IT UP comrade Rajan

    ReplyDelete